முதல் முறையாக, மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படவுள்ளது...நாடு முழுவதும் உள்ள 128 நகரங்களில் சுமார் 48 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 20 முதல் மார்ச் 7 வரை தேர்வு நடத்தப்படும். இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் காவலர் தேர்வை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. மத்திய ஆயுத காவல் படைகளில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பிராந்திய மொழிகளை மேம்படுத்தவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முயற்சியால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள் தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளிலும் தயாரிக்கப்படும். மத்திய அரசின் இந்த முயற்சியால், நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதி தேச சேவையில் ஈடுபடும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது...