சென்னைக்கு வந்த ஏலியன்ஸ்! திடீரென வானத்தில் தோன்றிய..? நேரில் பார்த்து அதிர்ந்து போன மக்கள்
சென்னை அருகே வானில் பறக்கும் மர்ம பொருள் காணப்பட்டதை தொடர்ந்து, வேற்றுகிரக வாசிகள் வந்தார்களா...? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக அலசும் ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
விண்வெளி அறிவியலில் அதிகம் பேசப்படும் ஏலியன்ஸ்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் உள்ளனரா...? இல்லையா என்ற கேள்வி விடையில்லாமல் தொடர்கிறது. வானில் பறக்கும் தட்டுகள் காணப்படும் நேரங்களில் எல்லாம் அது வேற்று கிரகவாசிகள் பயணிக்கும் தட்டுகள் என்ற பேச்சும் நிலவுகிறது.வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சில் மூழ்கியிருக்கும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனே, வேற்று கிரக வாசிகள் இருப்பதாக விளக்கும் எந்த தெளிவான அறிகுறிகளும் இல்லை என்றாலும் அந்த கூற்றை முழுமையாக ஒதுக்கிவிட முடியாது என ட்விஸ்ட் வைக்கிறது.
இதுதொடர்பான ஆய்வு ஒருபுறம் தொடர, சென்னையில் பறக்கும் தட்டு போல் மர்ம பொருட்கள் படம்பிடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்திலும் வேற்று கிரகவாசிகள் என்ற பேச்சை எழுப்பியிருக்கிறது.சென்னை முட்டுக்காடு கடற்கரையில் 25 ஆம் தேதி மாலை முன்னாள் டிஜிபி பிரதீப் பிலிப், வானில் மர்மமான பொருட்கள் காணப்பட்டதை தொடர்ந்து திகைத்திருக்கிறார். உடனடியாக அதனை தனது ஐபோனில் படம் பிடித்துள்ளார். வீடியோவை ஜூம் செய்து பார்க்கையில் ஒளிரும் தன்மை கொண்ட 4 மர்ம பொருட்கள் ஒரே திசையை நோக்கி சென்றது பதிவாகியிருந்தது.25 வினாடிகள் மட்டும் வானில் மர்ம பொருள் தென்பட்டதாக கூறிய பிரதீப் பிலிப், உடனடியாக அமெரிக்காவிலிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அனுப்பி அது குறித்த ஆய்வை மேற்கொள்ளவும் கேட்டுள்ளார். அவரிடமே நேரடியாக சென்று பேசிய போது, தான் வானில் கண்டது அறிவியலுக்கு மிஞ்சியதாக உள்ளது என்றார்.
அமெரிக்காவில் ஏற்கனவே வானில் பறக்கும் மர்ம பொருட்கள் தொடர்பான ஆய்வுகள் தொடரும் சூழலில், இந்தியாவிலும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.உலகில் முதன்முதலாக பறக்கும் தட்டை பார்த்தவர் அமெரிக்காவை சேர்ந்த விமானி கென்னெத் அர்னால்ட். அதன் தொடர்ச்சியாக பல நாடுகளில் பறக்கும் தட்டுகள் தென்பட்டதாக செய்திகள் வெளியாகியது.இந்தியாவில்கூட, 1951 தொடங்கி 2021 வரையில் 10-க்கும் மேற்பட்ட முறை பறக்கும் தட்டுகள் பார்க்கப்பட்டிருக்கிறது. இப்போது சென்னை அருகே பறக்கும் மர்ம பொருட்கள் காணப்பட்டதும், வழக்கமான வேற்று கிரகவாசிகள் வந்தார்களா...? என்ற கேள்வியுடன் அதுகுறித்த பேச்சு தொடர்கிறது.