ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு முதல் பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்தில் கொல்கத்தா ஓபனர் சால்ட், ஆட்டமிழந்து கோல்டன் டக்காகி வெளியேறினார்.ரகுவன்ஷி 24 ரன்களும், தொடக்க வீரர் சுனில் நரைன் 27 ரன்களும் எடுத்து ஜடேஜாவிடம் ஆட்டமிழந்தனர். மைதானத்தின் தன்மையை பயன்படுத்தி சென்னை பவுலர்கள் அபாரமாக பந்துவீச, கொல்கத்தா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.ரிங்கு சிங், ரஸல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, சற்று நேரம் களத்தில் நின்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சென்னை பவுலர்கள் ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 138 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் கேட்ச் ஆனார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேரைல் மிட்செல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடியது. நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். டேரைல் மிட்செல் 25 ரன்களில் போல்டானார். அடுத்து வந்த ஷிவம் துபே சிக்சர்களை பறக்கவிட்டு 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 17 புள்ளி 4 ஓவர்களில் 141 ரன்கள் அடித்து இலக்கை எட்டிய சென்னை, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுடனும் முன்னாள் கேப்டன் தோனி 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை தற்போது வெற்றி பெற்று, வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.