18 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்

Update: 2024-12-13 08:32 GMT

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 13 சுற்றுகள் முடிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷும் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரெனும் தலா 6 புள்ளி 5 புள்ளிகள் பெற்று இருந்தனர்.

இறுதிச் சுற்று... வெல்பவர் வசம் உலக சாம்பியன் பட்டம்... சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பிடிக்கும் வேட்கையுடன் கருப்பு வெள்ளைக் கட்டத்தில் களமாடத் தொடங்கினர் குகேஷும் லிரெனும்....

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு வீரர்களும் அபாரமாக நகர்வுகளை மேற்கொள்ள, இறுதிச்சுற்றும் டிராதான் ஆகும் என கணிப்புகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் ஆட்டம் செல்ல செல்ல வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய லிரெனுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார் குகேஷ்...

குகேஷ் வேகமாக நகர்வுகளை மேற்கொள்ள, லிரென் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். என்றாலும் இருவரும் சம பலத்துடன் காய்களைக் கொண்டிருந்தனர்.

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் குகேஷ் கூடுதலாக ஒரு சிப்பாயைத் தக்கவைக்க அதுவே அவருக்கு சாதகமானது.

55வது நகர்வில் தவறான இடத்தில் லிரென் தனது ரூக்கை((யானை)) நிலைநிறுத்த ஆட்டம் குகேஷ் வசமானது.

அவ்வளவுதான்... அடுத்தடுத்து அபார நகர்வுகளை மேற்கொண்ட குகேஷால் அதிர்ந்துபோன லிரென்,, 58வது நகர்வில் போட்டியில் இருந்து விலகினார். உலக சாம்பியன் ஆனார் குகேஷ்....

உலக சாம்பியன் ஆகி இருக்கும் சென்னையைச் சேர்ந்த குகேஷிற்கு வெறும் 18 வயதுதான்... மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி வரலாறு படைத்துள்ளார் குகேஷ்.... பல ஆண்டு பயிற்சியின் பலனாக பெருங்கனவை நனவாக்கி இருக்கிறார்.

நகர்வுகளுக்கு முன்பாக கண்ணை மூடி யோசிக்கும் வழக்கம் கொண்டவர் குகேஷ்... உணர்ச்சிகளையும் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர்... உலக சாம்பியன் ஆன பின்னர் அவரது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் கசிந்தது, காண்போரை நெகிழ வைத்தது.....

11 ஆண்டுகளுக்கு முன்பு ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்திடம் இருந்து கைநழுவிச் சென்ற உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்துள்ள குகேஷ்,,,, விஸ்வநாதன் ஆனந்த் விட்டுச் சென்ற இடத்தை இறுகப் பற்றி சதுரங்கத்தின் அடுத்தப் பேரரசனாக அரியணை ஏறி இருக்கிறார்....

Tags:    

மேலும் செய்திகள்