அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும், சட்டப்பிரிவு 370 மூலம் நாட்டை தவறாக வழிநடத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோதி சென்றார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஐந்தாயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களையும், ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீரின் வளர்ச்சியே பாரதத்தின் முன்னுரிமை என்றார். அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள், சட்டப்பிரிவு 370 என்ற பெயரில், காஷ்மீர் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டினார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் புதிய உச்சங்களை தொட்டு இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், காஷ்மீர் இளைஞர்களுக்கு சமமான உரிமைகளும், வாய்ப்புகளும் தற்போது கிடைப்பதாக கூறினார்.