`மாறுவேஷத்தில்' மக்கள் நீதி மய்யமா.. கமலின் தினுசான முடிவு.. திடீர் திருப்பம்.. மாறும் கோட்டா

Update: 2024-02-19 05:43 GMT

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முந்தி செயல்பட தொடங்கிய ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சிகளுடனான முதற்கட்ட பேச்சு வார்த்தையை நிறைவு செய்துள்ளது.

அதுவும் இம்முறை கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதால், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறையக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதில் இம்முறை திமுக கூட்டணியில் புதிதாக நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் திடீர் திருப்பமாக புது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது காங்கிரஸ் கட்சியின் மூலம் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்ல இரண்டு தொகுதிகளை கேட்டு வாங்கி, கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் நிற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவின்போது வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்த கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

இதை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடிகர் கமல் கலந்து கொண்டது தமிழக அரசியலில் பெரிதாக பேசப்பட்டது.

ராகுல் காந்தி மற்றும் கமலஹாசனுக்கு இடையேயான நெருக்கத்தின் பின்னணியில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகள் இருப்பதாக அப்போதே கூறப்பட்டது.

அடுத்து, சென்ற ஆண்டு நடைபெற்ற ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்‌.இளங்கோவனை ஆதரித்து, கமல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது காங்கிரஸ் வழியாக திமுக கூட்டணியில் கமலஹாசன் இடம்பெற வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் எழ தொடங்கின.

இடையில், தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரசுடன் இணைக்க இருக்கிறார் கமல் என்று கூட பேச்சுக்கள் அடிபட்டன.

இந்த நிலையில் தான் தற்போது நேரடியாக திமுக கூட்டணியில் இடம் பெறுவதை விட, காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்த வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்