திருச்சியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ரோடு ஷோ நிகழ்வில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார்...
இந்நிகழ்வு திருச்சி சாலை பகுதி முதல் உறையூர் சி.எஸ்.ஐ மருத்துவமனை வரை நடைபெற்றது. இதற்கான பாதுகாப்பு பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் பங்கேற்ற ஜே.பி. நட்டா, சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே வந்தார். அவருக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து குக்கர் சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார். இதில் சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே பேசிய அவர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் வீட்டிற்கு அனுப்புவோம் எனக் கூறினார்.