விசிக நம்பர்ஸ் கேம்..விட்டு ஆடும் திமுக அதிர்ச்சியில் மதிமுக..முரண்டு பிடிக்கும் கமல் சுக்குநூறான காங்.கின் டபுள் டிஜிட் கணக்கு திமுக கூட்டணியில் நடப்பது என்ன?

Update: 2024-03-02 13:39 GMT

மக்களவை தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தை அனல் பறக்க நடந்து கொண்டிருக்க, தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடைசி நேர இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு காரணம் என்ன ? என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிறது...

அதிலும் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை ஒரு மாதத்திற்கு முன்பே முதல் ஆளாக தொடங்கியிருந்தது.

இதில், முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதே போல் கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி உறுதியானது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

மதிமுகவை பொறுத்தவரை 2 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்ட நிலையில், திமுக சார்பில் ஒரு மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்க முன் வருவதாக கூறப்படுகிறது.

அதே வேளையில் அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை விதித்துள்ளது. இதனால் அந்த கட்சியுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.

இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என உறுதியாக இருப்பதோடு, அதில் 1 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கவும் தயார் என கூறியுள்ளது.

ஆனால் திமுக தரப்பிலோ, விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 தொகுதியில் ஏதேனும் 2 தொகுதியை தருகிறோம் பானை சின்னத்திலேயே போட்டியிட்டு கொள்ளுங்கள் என கூறிவிட்டதால், உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மறைமுகமாக ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை சீட்டு கோரும் நிலையில், ஒரேயொரு மக்களவை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

அத்துடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை விதிக்க, டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் கமல்ஹாசன் உறுதியாகவுள்ளதால் தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் திமுக கூட்டணியில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, 10 தொகுதிகள் வரை கேட்கும் நிலையில், 7 அல்லது 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வருவதால், ஒரு மாதம் ஆகியும் முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது...

இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்பதால், அதற்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது திமுக.

அதனால் இரண்டு, மூன்று நாட்களில் தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு எட்டப்பட்டு, அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என அறிவாலயம் வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்