இந்தியாவுக்குள், இதற்கு முன்பு வரை Franchise Model முறைப்படி வெளிநாட்டு காலணிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது முதல் முறையாக, கோத்தாரி குழும நிறுவனம், கிக்கர்ஸ் நிறுவனத்திடம் இருந்து முழுமையாக உரிமம் பெற்று, காலணி தயாரிப்பில் தொடங்கி, அதை விற்பனை செய்வது வரை அனைத்து பணிகளையும் செய்யப் போகிறது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, வங்கதேசம், பூட்டான், சவுதி அரேபியா உள்ளிட்ட 9 நாடுகளில் வர்த்தகம் செய்வதற்கு கோத்தாரி குழும நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் முதல் கிக்கர்ஸ் ஷூ பேஷன் ஸ்டோர், சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர். மாலில் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில், கோத்தாரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.ரஃபீக் அகமது, பிரான்ஸ் துணைத் தூதர் எட்டியென் ரோலண்ட் பீக்யூ, பிரான்ஸ் தூதரக அதிகாரி கார்ல் பவுலங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோத்தாரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜே.ரஃபீக் அகமது, இந்த விற்பனை மையத்தை தொடங்கி இருப்பதன் வாயிலாக, இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச தரத்திலான காலணிகள் உள்ளூரிலேயே கிடைக்கும் என்று கூறினார்.