உலகத்திலே நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் பெற்ற ஒரே நாடு இந்தியா தான்.. ஏன்?
இந்திய சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15 தேர்ந்தெடுக்கப் பட்டதின் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.
இரண்டாம் உலகப் போரினால் திவால் நிலைக்கு தள்ளப்பட்ட பிரிட்டன், அதன் காலனிகளை நிர்வாகிக்க முடியாமல் அவற்றிற்கு படிப்படியாக விடுதலை அளித்தது.
1948 ஜூன் 30க்குள் இந்தியாவிற்கு விடுதலை அளிக்க பிரிட்டன் நாடாளுமன்றம் முடிவு செய்தது. இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக பணியாற்றிய லார்ட் மவுன்ட்பேட்டன், ஒரு ஆண்டு முன்னதாக1947 ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.
இரண்டம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பான், நேச நாடுளிடம் சரணடைந்த தினம் 1945 ஆகஸ்ட் 15 என்பதால், அந்த தேதியை லார்ட் மவுண்ட்பேட்டன் தேர்ந்தெடுத்தார். அவர் அந்த சமயத்தில் நேச நாடுகளின் தென் கிழக்கு ஆசிய கட்டளை மையத்தின் தளபதியாக இருந்தார்.
1947 ஆகஸ்ட் 15ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்படும் என்று அவர் அறிவித்தவுடன், நாடு முழுவதும் இருந்த ஏராளமான ஜோதிடர்கள் இந்த தேதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜோதிட ரீதியாக அந்த நாள் மிக மோசமானது என்றும், அந்த தேதியில் சுதந்திரம் அளிக்கப்பட்டால், பிறகு இந்தியாவில் லஞ்சம் ஊழல் வெகுவாக அதிகரித்து, பெரும் சீரழிவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.
அன்றைய தினத்தில் மிக பிரபலமாக இருந்த மடாதிபதிகள் மற்றம் ஜோதிடர்கள் பலரும் மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடிதம் எழுதி தேதியை மாற்ற கோரினர்.
தேதியை மாற்ற முடியாவிட்டால், சுதந்திர பிரகடனம் செய்யப்படும் நேரத்தை, ஆகஸ்ட் 15 பகலில் செய்யாமல், நள்ளிரவு நேரத்தில் செய்யும்படி கூறினர். நள்ளிரவு நேரத்தில், ஜோதிடப்படி குறைந்த அளவு தீமை செய்யும் கிரக அமைப்பு உள்ளதாக கூறினர்.
எனவே ஆகஸ்ட் 15ன் முதல் நிமிடத்தில் அதாவது நள்ளிரவில், இந்திய விடுதலை பிரகடனம் செய்யப்பட்டது. உலகில் வேறு எந்த நாடும் நள்ளிரவில் சுதந்திரம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.