தொடர் மழை மற்றும் பனியால் ஈரப்பதத்துடன் காணப்படும் நெல் மணிகளைக் காய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தஞ்சையில் ஒவ்வொரு நாளும் நெல் கொள்முதல் நிலையங்களில் 2 ஆயிரம் மூட்டைகள் அளவுக்கு கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இடப்பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை தான் இதற்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இதனால் நெல் வரத்து அதிகமாக உள்ள இடங்களில் கூடுதலாக கொள்முதல் நிலையங்களைத் திறக்க உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காய வைப்பது, அள்ளுவது உள்ளிட்ட வேலைகளுக்கு விவசாயிகளே தொழிலாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் இதற்காகவே பெரும் தொகை செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், மழை மற்றும் பனி காரணமாக நனைந்த நெல் மணிகளைக் காய வைப்பதற்கு விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், நெல் குவியல்களுடன் சாலை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கும் நிலை தொடர்கிறது. நெல்லின் ஈரப்பதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.