அச்சுறுத்தும் BF.7 கொரோனா..! என்னென்ன கட்டுப்பாடுகள்..? திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
தமிழகத்தின் 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருவோர் அங்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லதுகொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, பழைய வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 விமான நிலையங்களுக்கும் வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி தவணைகளை நிறைவு செய்திருக்க வேண்டும் எனவும்,
தொற்று அறிகுறிகளுடன் வரும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும்,
ரேண்டமாக 2 சதவீதம் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது ஏதேனும் அறிகுறி இருப்பின் 104 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள மருத்துவ நிலையத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும்,
12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை இல்லை என்றாலும், அறிகுறிகள் இருந்தால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிகிச்சையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.