தி.மலை பாணியில் கொள்ளை முயற்சி - "திருமணத்திற்கு பணம் இல்லை".. கட்டிங் மிஷினுடன் ஏடிஎம்க்குள் புகுந்த இளைஞர் - புதுச்சேரியில் பரபரப்பு
- கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருவண்ணாமலையில், 4 ஏடிஎம்களை உடைத்து நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் அதே பாணியில், புதுச்சேரியில் கொள்ளையடிக்க முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர், நகர பகுதியில் உள்ள 14 தனியார் வங்கி ஏ.டி.எம்.
- இயந்திரங்களின் பராமரிப்பாளராக உள்ளார். மூர்த்தி பணியில் இருந்த போது, அவரது செல்போன் எண்ணிற்கு, லெனின் வீதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் இருந்து, எச்சரிக்கை ஒலி வந்துள்ளது. இதில், பதறிப்போன மூர்த்தி, உடனடியாக உருளையான்பேட்டை காவல் நிலையத்திற்கு இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
- தகவலை பெற்றவுடன் போலீசார் அங்கு சென்றபோது, ஏ.டி.எம் மையத்தில், இளைஞர் ஒருவர், மிஷின் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
- அதில், அவர் கன்னியாகுமரி மாங்கோடு பகுதியை சேர்ந்த அனு என்பது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக புதுச்சேரியில் தங்கி, உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் .
- திருமணத்திற்கு வீட்டில் பெண் பார்த்து வருவதால், திருமண செலவுக்காக பணத்தை ஏற்பாடு செய்யும்படி வீட்டில் கூறியதாகவும், அதனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாகவும் அனு போலீசாரிடம் தெரிவித்தார்.
- இதற்காக, திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த ஏடிஎம் கொள்ளை செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து, அதே பாணியில், பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும், அதற்காக, உணவகத்தில் இருந்த கட்டிங் மெஷினைக் கொண்டு, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாகவும் அனு, தனது வாக்குமூலத்தில் தெரிவித்தது போலீசாருக்கு திகைப்பை ஏற்படுத்தியது.
- பின்னர், கைதான அனு மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மெஷினை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார், காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
- திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு செல்ல இருந்த இளைஞர், திருமண செலவுக்காக உழைத்து சம்பாதிக்காமல், குறுக்கு வழியில் கொள்ளையில் ஈடுபட்டு, சிறைக்கு சென்றிருப்பதுதான் மிச்சம்.