"அறியாமல் இன்னொருவர் வீட்டுக்குள் புகுந்த மனநோயாளியை அடித்தே கொன்றுவிட்டார்கள்"
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மர்ம மரணம்
போலீசாரே அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு
மனநல காப்பகத்தில் இருந்தவரை அழைத்துச் சென்றது ஏன்?
உறவினர்களிடம் போலீசார் முறையாக சொல்லாதது ஏன்?
சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் உறவினர்கள்
உடலை வாங்க மறுத்து சாலையில் திரண்டதால் பரபரப்பு
மனநல காப்பகத்தில் இருந்தவரை விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்று கொன்று விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பது அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி.
33 வயதான இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையானதோடு சற்று மனநலம் குன்றியவராகவும் இருந்து வந்தார்.
அவ்வப்போது வீட்டுக்கு வராமல் சாலையோரம் விழுந்து கிடப்பதும் இவரின் வழக்கமாக இருந்துள்ளது. சம்பவத்தன்று இதுபோல் எம்டிஆர் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென நுழைந்திருக்கிறார் தங்கபாண்டி.
சில மாதங்களுக்கு முன்பாக இதே எம்டிஆர் நகரில் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் தங்கபாண்டியின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது...
உடனே அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது தங்கபாண்டி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவரவே, போலீசார் உரிய சான்றிதழோடு அவரை அனுப்பி வைத்தனர். பின்னர் உறவினர்களும் அவரை ராமானுஜபுரம் கிராமத்தில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளனர்...
இந்த சூழலில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை ஏன் விடுவித்தீர்கள் என எம்டிஆர் நகர் பகுதி மக்கள் கேள்வி எழுப்பவே, அருப்புக்கோட்டை போலீசார் காப்பகத்தில் இருந்து தங்கபாண்டியை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் அவரை அதிகாலை 3 மணியளவில் காப்பகத்தில் ஒப்படைத்த சற்று நேரத்திலேயே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த சற்று நேரத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காப்பகத்தில் இருந்தவரை தங்களிடம் கூட சொல்லாமல் போலீசார் அழைத்துச் சென்றது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்ததோடு, போலீசார் தாக்கியதே மரணத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்...