அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். இதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொட்ட பிரதமர் மோடி, இந்த முறைதான் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பின்பேரில் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். ஐ.நா. தலைமையகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தலைமை ஏற்று நடத்துகிறார். அதைத்தொடர்ந்து, வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா உறவுகளை ஆழப்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வரும் 24, 25-ந் தேதிகளில் எகிப்து நாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.