மூச்சு திணறும் முத்துநகர் மக்கள் - கடைக்கண் பார்வை பார்க்கும் அரசு?

Update: 2023-07-23 04:13 GMT

இன்றைய மாவட்ட ஸ்பெஷல் தொகுப்பில், தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ரயில்வே கேட் பகுதியில் சுரங்க பாதை அல்லது மேம்பாலம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக மக்கள் விடுத்து வரும் கோரிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தனி மாவட்டமாக பிரிக்கப் பட்ட தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சியை நோக்கியே பயணித்துவருகிறது.

ஆரம்ப காலத்தில் முத்துக்குளித்தல் மற்றும் மீன்பிடித்தல் மட்டுமே பிரதான தொழிலாக இருந்த நிலையில், நாளடைவில் உப்பளத்தொழில், விவசாயம் என பிசி மாவட்டமாக மாறியது தூத்துக்குடி.

தொழில் செய்வதற்கான அனைத்து கட்டமைப்புகளும் உள்ள மாவட்டமாக தூத்துக்குடி திகழ்வதால் இங்கு பல்வேறு தொழில் சார்ந்தவர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

பரபரப்பாக காணப்படும் தூத்துக்குடியில் வாகன நெரிசலுக்கும் குறையே இல்லை. இதற்கு தூத்துக்குடி ரயில் நிலையம் தான் முக்கிய காரணம் என்கின்றனர் பொதுமக்கள்.

ஆங்கிலேயார் ஆட்சி காலத்தில், தூத்துக்குடியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது சென்னை, மைசூர், கோவை, நெல்லை நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தால் ஊருக்கு நடுவே 3 ரயில்வே கேட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

ரயில்வே கேட்கள் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ரயில்வே கேட் மூடப்பட்டால், பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பது பல ஆண்டுகால பிரச்சினையாக தொடர்கிறது.

இதனால் பணிக்கு செல்வோர், பள்ளிக்கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் ஊருக்கு நடுவே இருக்கக்கூடிய இரயில் நிலையத்தை தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டான் பகுதிக்கு மாற்றிமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் கருதப்படுகிறது

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் அமைச்சர், எம்.பி. எம்.எல் ஏ, மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மக்களை வாட்டும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுரங்கப்பாதையோ அல்லது மேம்பாலத்தையோ கட்டித்தர வேண்டும் என்பது மட்டுமே மக்களின் கோரிக்கை யாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்