பேரு தான் 'குட்டி' ஆனால் சாதனை 'பெருசு'... 6 மலை உச்சி.. 3 மாத கடும் பயிற்சி - சிகரம் தொட்டு சாதித்த தமிழர்

Update: 2023-05-21 02:30 GMT

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில், ஏறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருந்தாலும், மலையேறும் ஆர்வம் கொண்டவர்கள் எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை செய்வதை லட்சிய கனவாக கொண்டிருப்பார்கள். அது போல உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் எவரெஸ்ட்டை நோக்கி செல்கின்றனர். அந்த வகையில், சென்னை கோவளத்தை சேர்ந்த 27 வயதான அலைச்சறுக்கு வீர‌ர் ராஜசேகர் பச்சைக்கும் எவரெஸ்ட் மீது ஏற ஆசை வந்த‌து. குட்டி என்று அழைக்கப்படும் ராஜசேகர், ஃபிட்னஸ், அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்து வரும் நிலையில், எவரெஸ்ட் உச்சியில் கால்தடம் பதித்து சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது.

அதற்காக ஒரு ஆண்டு காலம் பயிற்சிகளை ராஜசேகர் மேற்கொண்டார். 6 மலை உச்சிகளில் ஏறி தன்னுடைய எவரெஸ்ட் கனவுக்காக தயார்படுத்திக்கொண்டார். 3 மாதங்களாக உடற்பயிற்சி மேற்கொண்ட ராஜசேகர், எவரெஸ்ட் மலையில் நிலவும் கடும் குளிரை தாங்குவதற்காக, பனி படர்ந்த மணாலி, சோலங், நேபாளம் போன்ற பகுதிகளில் தங்கி, தனது உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

சிகரம் ஏற வேண்டும் என்ற தனது கனவு பயனத்தை, ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் (Base camp) இருந்து தொடங்கினார். எவரெஸ்ட் மலையில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏறினார். 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தின் உச்சியை ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு தொட்டு தனது கனவை ராஜசேகர் பச்சை நனவாக்கினார்.

கனவு பயணத்தின்போது, கடும் பனிப்பொழிவால் நடக்க முடியாத சூழல், தட்ப வெப்ப நிலை என பல்வேறு தடைகள் சூழ்ந்தாலும், மன உறுதியுடன் முன்னேறி சென்று எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட தமிழர் என்ற சாதனையை ராஜசேகர் படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மீண்டும் பேஸ் கேம்ப்புக்கு திரும்பியதும், பனிப்பொழிவுக்கு மத்தியில் பாராட்டு மழையை சக மலையேற்ற வீர‌ர்கள் பொழிந்தனர். ராஜசேகரின் சாதனை செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்த‌தாக தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய பாராட்டுக்களையும் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்