திடீரென உடல் முழுவதும் கருப்பாக மாறிய சிறுமி; காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர்
கிளியனூரில் சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்த சுகுமார் என்பவரின் 5 வயது மகளுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுமிக்கு உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் ஈச்சங்காட்டை சேர்ந்த கணேசன் என்பவர் மருத்துவம் பார்த்துள்ளார். சிகிச்சைக்கு பின் சிறுமியின் உடல் கருமையாக மாறியதை தொடர்ந்து அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் தவறான சிகிச்சை அளித்த கணேசன் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திண்டிவனம்- புதுவை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிளியனூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.