பேருந்துக்குள்ளேயே உயிர்விட்ட மனைவி.. திக்கற்று கலங்கி நின்ற கணவன் - கடவுள் போல வந்த இன்ஸ்பெக்டர்
அரசுப் பேருந்தில் உயிரிழந்த மனைவியை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவித்த கணவருக்கு, காவல் ஆய்வாளர் தனது செலவில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி அருணாச்சலம்-செல்வி. இவர்கள் சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் தங்கியிருந்து, மரக்கடை மற்றும் உணவகத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், அருணாச்சலம் தனது மனைவியை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து திருநெல்வேலி செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது, மயங்கிய நிலையில் இருந்த செல்வியை கண்டு சந்தேகித்த நடத்துநர், 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளார். மருத்துவ ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், செல்வி உயிரிழந்ததாகக் கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செல்வியை ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அருணாச்சலம் பணம் இல்லாமல் தவித்ததையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அசோகன், தனது செலவில் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.