உயிரோடு எரிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி..! - 'மரண'பூமியான மணிப்பூர்..!
நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த மணிப்பூர் கலவரத்தில், சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மணிப்பூரில் அரங்கேறிய கொடுமைகள் இரு மாதங்களை கடந்து ஒவ்வொன்றாய் வெளிவந்து காண்போரை உலுக்கி வருகிறது. இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி மக்களை கலக்கமடைய செய்தது.
இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கணவர் ராணுவ வீரர் என்ற செய்தி ஒட்டுமொத்த இந்தியாவை தலைகுனிய செய்த, நிலையில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி தீக்கிரையாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மே 3ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய கலவரம் நாளுக்கு நாள் காட்டுமிரண்டித்தனத்தின் உச்சத்தை தொட்டுள்ளது என்பதற்கு இந்நிகழ்வே சாட்சி.
மே 28ம் தேதி, காக்சிங் மாவட்டத்தின் செரோவ் கிராமத்தில்,
நள்ளிரவு 2 மணியளவில் கலவரக்காரர்கள் துப்பாக்கிகள் மற்றும் தீப்பந்தத்துடன் நுழைந்தனர்.
அந்த கிராமத்தில் தான் சுதந்திர போராட்ட வீரரான சுரா சந்த் சிங்கின் மனைவி, இபிடோம்பி வசித்து வந்தார். கலவரக்காரர்கள் உள் நுழைவதை அறிந்த அவர், உடனடியாக தன் பேரன் மற்றும் குடும்பத்தினரை அங்கிருந்து செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார்.
தன்னால் வேகமுடன் நடக்க முடியாது என்பதால், கலவரக்காரர்கள் சென்ற பின், தன்னை வந்து காப்பாற்றும்படி தன் பேரனிடம் கூறியுள்ளார்.
பாட்டியின் பேச்சை கேட்டு பேரன் ஓடி ஒளிந்து செல்ல, 2 குண்டடியுடன் பேரன் தப்பியோடியுள்ளார். வன்முறை சற்று தணிந்த பின் அதிகாலை 5 மணியளவில் பாட்டியை தேடி வந்த பேரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாட்டியை விட்டு சென்ற வீடு, குண்டுகள் துளைக்கப்பட்டு, தீக்கிரையாகி தரைமட்டமாக கிடந்தன. தான் தப்பிச்சென்றதும், அங்கு வந்த கலவரக்காரர்கள், வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு வீட்டிற்கு தீ வைத்தது பேரனுக்கு தெரியவந்தது.
வீடு மொத்தம் மளமளவென பற்றி எரிய, வீட்டிற்குள் இருந்த சுதந்திர போராட்ட வீரரின் மனைவி இபிடோம்பி உடல் கருகி துடிதுடிக்க உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்து 2 மாதங்களை கடந்த நிலையில், இன்று வரை வன்முறையின் வடுக்கள் மறையவில்லை. இடிந்து கிடந்த வீட்டில் சுதந்திர போராட்ட வீரர் சுரா சந்த் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் எடுத்து கொண்ட புகைப்படம் மட்டுமே எஞ்சி இருந்தது.
நாட்டுக்காக போராடியவரின் குடும்பத்தினருக்கு அந்நாட்டிலேயே பாதுகாப்பில்லை என்பது இந்திய மக்களை வெட்கி தலைகுனிய செய்துள்ளது.