நாய்களை வெறிநாய்களாக்கும் கறிக்கடை.. வாசல் தெளித்த 5 பெண்களுக்கு நேர்ந்த கதி.. ஒரு இடம் கூட விடாமல் கடித்த கொடூரம்
சமீபகாலமாக நாடுமுழுவதும் நாய்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் நாய்கடி சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது.
தமிழகத்திலும் தெருநாய் கட்டிக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் வழக்கம்போல் அதிகாலை எழுந்து முற்றத்தை கூட்டி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 10-க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென வீட்டு பணிகளை செய்து கொண்டிருந்த பெண்களை நோக்கி ஆக்ரோஷமாக பாயத்தொடங்கின.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் செய்வதறியாது, திகைத்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு கைகளில் கிடைத்த துடைப்பம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு நாய்களை துரத்த முயன்றனர்.
அதற்குள் அந்த பெண்களை கை, கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் நாய்கள் கடித்து குதறின. வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த பெண்கள் நாய்களிடமிருந்து தப்பித்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
வெறி நாய்கடி தாக்குதலில், குருவம்மாள் (வயது 60), பேச்சியம்மாள் (65), வேலம்மாள், ராமாத்தாள், கிருஷ்ணம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த கிராம வாலிபர்கள் நாய்களை விரட்ட முயன்றனர். ஆனால், அவர்களையும் நாய்கள் துரத்தி துரத்தி கடிக்க தொடங்கின.
கைகளில் கிடைத்த கல், கட்டைகளை கொண்டு எறிந்து வெறி நாய்களை ஒரு வழியாக அங்கிருந்து துரத்தி அடித்தனர். நாய்களை துரத்தும் முயற்சியில் ஈடுப்ட்ட இளைஞர்கள் இருவரும் நாய் கடிக்கு ஆளாகினர்.
படுகாயமடைந்த பெண்கள் உள்ளிட்ட 7 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட செந்தட்டி கிராமத்தில் பண்ணையில் அடைத்து வளர்க்கப்பட்டு வந்த 30 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றன.
இதேபோல, சுற்று வட்டார கிராமங்களில் இந்த ஆண்டு மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது குறிப்ப்பிடத்தக்கது.
கறிக்கடைகளில் கொட்டப்படும் கழிவுகளை அதிகளவில் உண்டு வாழும் நாய்கள் மாமிசம் சாப்பிட்டு பழகிவிட்டதால் அது கிடைக்காத போது ஆடு, மாடு கோழிகளை கடித்து சாப்பிட முற்படுகின்றன. சில நேரங்களில் மனிதர்களையும் கடிக்க தொடங்குகின்றன.
எனவே, இறைச்சி கடைகளில் கழிவுகளை ஆங்காங்கே கொட்டிச்செல்வதை தடுக்க வேண்டும் என்றும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி உணர்வுக்கு அடையாளமாக கூறப்படும் வீட்டு வளர்ப்பு நாய்கள் கூட இது போன்று திடீரென வெறிபிடித்து ஆட்களை கடித்து குதறும் செயலில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.