பொங்கல் திருவிழாவிற்கு அனுமதி கேட்ட கிராம மக்களிடம், லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே தச்சனேந்தல் கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோயிலில் கிராம மக்கள் திருவிழா கொண்டாட இருந்தனர். இதற்காக, நரிக்குடி காவல் ஆய்வாளர் ராமநாராயணனிடம் அனுமதி கேட்டு கிராம மக்கள் மனு அளித்த நிலையில், ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் அனுமதி வழங்குவதாக ராமநாராயணன் கூறியதாக தெரிகிறது. இந்த தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ரகசியமாக தெரிவித்த கிராமத்து மக்களிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து காவலரிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்படி கிராம மக்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, காவல் ஆய்வாளர் ராம நாராயணன் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.