கடலில் வீசிய பயங்கர சூறைக்காற்று.. விசைப்படகுகளை இயக்க முடியாமல் தவிப்பு - பரபரப்பு சம்பவம்

Update: 2022-08-03 09:08 GMT

கடலில் வீசிய பயங்கர சூறைக்காற்று.. விசைப்படகுகளை இயக்க முடியாமல் தவிப்பு - பரபரப்பு சம்பவம்

குமரி மாவட்டத்தின் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கரை திரும்பாத 15 விசைப்படகுகள் நள்ளிரவில் பாதுகாப்பாக கரை திரும்பின.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததால் நேற்று காலை முதல் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஆனால் வரும் 3ம் தேதி வரை சூறைக்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தகவல் வருவதற்கு முன்பே விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன.

கடலில் பயங்கரமான சூறைக்காற்று வீசியுள்ளது.

இதனால் மீனவர்கள் விசைப்படகுகளை இயக்க முடியாமல் தவித்துள்ளனர்.

இதையடுத்து பல மீனவர்கள் ஒருவழியாக விசைப்படகுகளுடன் கஷ்டப்பட்டு கரைக்குத் திரும்பினர்.

நேற்று இரவு வரை 115 விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பிய நிலையில், தொடர்ந்து அவற்றை மீனவர்கள் பாதுகாப்பாக துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

மீதம் உள்ள 15 விசைப்படகுகள் கரைக்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மீனவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் 15 விசைப்படகுகளில் இருந்த சுமார் 200 மீனவர்களும் நேற்று இரவில் குளச்சல், முட்டம், கொல்லம், மூதாக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் பாதுகாப்பாக கரை சேர்ந்ததால் மீனவ மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்