தெலங்கானா அரசின், இரட்டை படுக்கையறை வீடு ஒதுக்கீடு செய்வதில் முறையான நடவடிக்கையை பின்பற்றவில்லை எனக குற்றம்சாட்டி, பொது இடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானாவில், வறுமை கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்கு, இரட்டை படுக்க அறையுடன் கூடிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அங்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சித்தி பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், முஸ்தாபாத் நகரில் இருக்கும் சாலை சந்திப்பு ஒன்றில், விளம்பர பலகையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, அந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அதன் பின்னர், அந்த இளைஞர் பற்றிய விவரங்களை சேகரித்து, வீடு வழங்குவதற்கான பணிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.