“எல்லையில் சத்தியம் செய்து கொடுத்த பாம்பு“.. "கரும்பைப் பேய்க் கரும்பாக மாற்றிய அய்யனார்" - வவ்வால்கள் காக்கும் அதிசய கோயில்!
கோயிலில் குடிகொண்டுள்ள வவ்வால்களுக்காக ஒரு கிராம மக்கள் அக்கோயிலில் மேளதாளங்கள் இசைக்காமலும், பட்டாசு வெடிக்காமலும் இருந்து வரும் அதிசயம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
அதென்ன கரும்பாயிரம் கொண்ட அய்யனார்? என்ற கேள்வி நமக்கு எழாமலில்லை... அதற்கு ஒரு அழகிய கதையைச் சொல்லி நம்மை அசர வைத்தனர் இந்த கிராமத்துப் பெரியோர்...
அதாவது, இயற்கை வளம் கொழித்த இந்த இளங்கார்குடியில்...அறுவடை செய்த கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஒரு வண்டி சென்றுள்ளது... அப்போது குழந்தை வடிவில் வந்த அய்யனார்... அந்த வண்டியை வழிமறித்து, சாப்பிட கொஞ்சம் கரும்பு கேட்டாராம். விண்டிக்காரர் தர மறுக்கவே அத்தனை கரும்புகளையும் உண்ண முடியாத பேய்க்கரும்பாக மாற்றிவிட்டாராம். கரும்பாயிரம் கொண்ட அய்யனார் என்ற பெயருக்கு இதுதான் காரணம்.
பேய்க்கரும்பு கொண்ட அய்யனாருக்கு இங்கே காவலாக இருப்பது எது தெரியுமா? வவ்வால்கள். அதனாலேயே இக்கோயிலுக்கு வவ்வால் கோயில் என்ற பெயருமுண்டு. கோயிலைக் காவல் காக்கும் வவ்வால்களுக்காக இந்தக் கோயிலில் மேளம் கொட்டுவதோ, வெடி வெடிப்பதோ கிடையாது.
இந்த கிராமத்தைப் பொறுத்தவரை வவ்வால்கள் மட்டும் ஆச்சரியம் தரவில்லை. பாம்புகளும் அதைவிட பெரிதாக வியப்பை தருகின்றன. இங்கே இது வரை யாருமே பாம்பு கடித்து இறந்ததில்லையாம். ஊரில் யாரையும் கொல்லமாட்டேன் என முற்காலத்தில் கிராம எல்லையில் பாம்பு ஒன்று சத்தியம் செய்து கொடுத்ததுதான் அதற்கு காரணம் என்கிறார்கள்.