முதல்வர் பற்றி ட்விட்டரில் அவதூறு.. 48 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தந்த போலீஸ்
முதலமைச்சரை பற்றி சமூக ஊடகத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு 48 நாட்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசார் தண்டனை பெற்று தந்துள்ளனர்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த அரவிந்த் நாகராஜன் என்பவர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும், தமிழக காவல்துறையைப் பற்றியும் நாகரீமற்ற முறையில் சமூக ஊடகத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். முடிந்தால் தன்னை காவல் துறை கைது செய்யட்டும் என்றும் அவர் சவால்விட்டிருந்தார். இதுகுறித்து, அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை சைபர் க்ரைம் போலீசார், அவரை அக்டோபர் 12-ஆம் தேதி கைது செய்தனர். அவர் கைதான 15 நாட்களில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டி, சென்னை எழும்பூர் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில், சைபர் கிரைம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன்படி அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, 17 நாள்கள் சிறை தணடனையும், 6 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது