சேலத்தில் கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத லாட்டரி விற்பனைக்கு பணம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக, உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ராஜா, சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்தவர்களிடம் பணம் பெற்றதாகவும், கிராம மக்களை அவதூறாகப் பேசியதுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வருவதாகவும், சேலம் மாநகர காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்த விசாரணைக்குப்பின் கடந்த வாரம் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, கருப்பூர் காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். ராஜா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.