இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி - புதைக்கப்பட்டது யாருடைய உடல்? -மீண்டும் தோண்டி எடுத்த அதிகாரிகள்.. குன்னூரில் அரங்கேறிய அதிர்ச்சி
குன்னூரில் இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீரென உயிருடன் வந்த நிலையில் புதைக்கப்பட்ட உடல், மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதனை குன்னூர் வெலிங்டன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றி திரிந்த 65 வயதான ராஜேந்திரன் என்பவர், இறந்ததாக நினைத்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே திரும்பி வந்த ராஜேந்திரன், கேரளா சென்று நீண்ட காலம் அங்கேயே தங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே குன்னூர் வெலிங்டன் போலீசார் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலையில் அடக்கம் செய்த இடத்தில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். உடல் எலும்புக் கூடாக இருந்த நிலையில் சில பாகங்களை ஆய்விற்காக கொண்டு சென்றனர் . பின்னர் உடலை மீண்டும் அங்கேயே அடக்கம் செய்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.