'செல்லமே' பட பாணியில் DMK கவுன்சிலர் மகளை துடிக்க துடிக்க கொன்ற சிறுவன்.. போலீசாரை மிரளவிட்ட சீன் பை சீன் வாக்குமூலம்

Update: 2023-06-11 04:07 GMT

தருமபுரியில், திமுக கவுன்சிலர் மகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவத்தில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்ததன் அதிர்ச்சி பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

நடிகர்கள் விஷால், பரத் மற்றும் ரீமாசென் நடித்த 'செல்லமே' படத்தைப் போலவே, பகீர் சம்பவம் ஒன்று தருமபுரியில் அரங்கேறியுள்ளது.

தருமபுரியில், 8வது வார்டு திமுக உறுப்பினராக இருந்து வருபவர் புவனேஸ்வரன். இவரது மகள் ஹர்ஷா, ஓசூரில் உள்ள தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு, நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில், பாறைகளுக்கு இடையே ஹர்ஷா மர்மமான முறையில் இறந்து கிடந்தது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹர்ஷாவின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கொலைக்கான காரணம் என்ன? யார் கொலை செய்தது? என்பது குறித்து, தீவிரமாக விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

ஹர்ஷாவுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்ததாக கூறப்படும் நிலையில், ஓசூரில் உள்ள தனியார் மருந்தக நிறுவனத்தில் பணியாற்றிய அவர், பெற்றோருக்கே தெரியாமல், எதற்காக தருமபுரி வந்தார்? என்பதுதான், உறவினர்களுக்கும், போலீசாருக்கும் புலப்படாமல் இருந்தது.

போலீசாரின் துரித விசாரணையின்போது துப்பு கிடைத்ததில், ஹர்ஷாவை கொலை செய்தது தருமபுரி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தான் என்பது உறவினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, 'செல்லமே' படத்தில் வரும் பரத், ரீமாசென் கதாபாத்திரம் போலவே இவர்களின் பழக்கமும் இருந்து வந்துள்ளது.

17 வயதான சிறுவன், ஹர்ஷாவின் குடும்ப நண்பராக இருந்து வந்ததும், 23 வயதான ஹர்ஷா மீது, சிறுவனுக்கு காதல் மலர்ந்ததும் தான், இந்த கொடூர சம்பவம் அரங்கேறுவதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளது.

ஹர்ஷாவை மறைமுகமாக காதலித்து வந்துள்ள சிறுவன், திருமணத்திற்கு வரன் பார்த்து வருவதை பொறுத்துக் கொள்ளாமல், தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளான்.

அப்போது, வயது வேறுபாட்டை காரணம் காட்டியதுடன், படிக்கும் வயதில் இதுபோன்று யோசிக்க வேண்டாம் என ஹர்ஷா, சிறுவனுக்கு புத்திமதி சொல்லியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு, செல்லமே படத்தின் பரத் கேரக்டராகவே மாறிய சிறுவன், தனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது என வெறிகொண்டு அலைந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சியில் இருந்த சிறுவன், ஓசூரில் பணியாற்றிய ஹர்ஷாவிற்கு போன் செய்து, காதல் விவகாரம் குறித்து நேரில் பேச வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளான்.

சிறுவனின் குணத்தை அறியாத ஹர்ஷா, இத்துடன் முடியட்டும் என நினைத்து, தாய், தந்தை யாருக்கும் சொல்லாமல், ஓசூரில் இருந்து கோம்பை வனப்பகுதியில் சிறுவனை சந்திக்க சென்றுள்ளார்.

விடாப்பிடியாக இருந்த சிறுவன், மீண்டும் காதலிப்பதாக கூறவே, அதிருப்தி அடைந்த ஹர்ஷா அதற்கு மறுத்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிறுவன், சற்றும் எதிர்பார்க்காமல், திடீரென ஹர்ஷா அணிந்திருந்த துப்பாட்டா துணியாலேயே, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தது, போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறுவனை ஆஜர்படுத்திய போலீசார், சேலம் மாவட்டத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அனுப்பி வைத்தனர்.

வயது கோளாறால் சிறுவன் செய்த அதிர்ச்சி காரியத்தால், மகளை பறிகொடுத்த குடும்பம், சொல்லொண்ணா வேதனையில் பரிதவித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்