குடியரசு தின விழா கொண்டாட்டம் - புதிய இடம் தேர்வு

Update: 2022-12-01 17:09 GMT

தமிழக அரசு சாா்பில் நடத்தப்படவுள்ள, குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான இடம் மாற்றப்படவுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், சென்னை கடற்கரைச் சாலையில், காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகம் எதிரேயுள்ள, மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக நடத்தப்பட்டு வந்தன. காந்தி சிலை வளாகம், மிகவும் பாரம்பரியமானது என்பதால், கடந்த 50 ஆண்டுகளாக இந்த இடத்தில்தான் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், மெட்ரோ ரயில் பாதைக்காக, காந்தி சிலையை வேறு இடத்துக்கு மாற்ற பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு, சிலை மூடப்பட்டுள்ளது. இதனால், வரும் குடியரசு தின விழா எங்கு நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், காமராஜா் சாலையிலேயே குடியரசு தின விழாவை நடத்த 2 இடங்களைத் தோ்வு செய்திருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உழைப்பாளா் சிலை அல்லது விவேகானந்தா் இல்லம் முன்பாக விழாவை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, பாதுகாப்பான இடத்தை இடத்தை இறுதி செய்ய, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்