நாமக்கலை உலுக்கிய இளம்பெண் பலாத்கார கொலை வழக்கு - சிபிசிஐடி-க்கு அதிரடி மாற்றம்

Update: 2023-05-15 10:20 GMT

ஜேடர்பாளையம் அருகே கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி, பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில், உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க கோரியும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக, அந்தப் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் ஆகியவற்றின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசும் சம்பவங்களும் அரங்கேறின.

இந்த சூழலில், இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில், அங்குள்ள வெல்ல ஆலைக் கொட்டகையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்த 3 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங், கோவை மண்டல ஐ.ஜி சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்