அதிகாரிகளைக் பார்த்து தங்கத்தை கடலில் வீசிய நபர்கள்..3 பேருக்கு செக்... தீவிர விசாரணையில் அதிகாரிகள்
ராமநாதபுரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு, கடலில் வீசப்பட்ட 17 புள்ளி 7 கிலோ தங்கம், இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் 17 புள்ளி 7 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 3 பேர், கடலோர காவல்படையினரைக் கண்டதும், கடலில் வீசினார்கள்.
அந்தப் படகில் வந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான், அன்வர் அலி, மன்சூர் அலி ஆகிய மூன்று பேரையும் பிடித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, கடலில் பார்சல்களை வீசிய இடங்களில் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், தூத்துக்குடி முத்து குளிக்கும் வீரர்களின் உதவியுடன் கடலில் வீசப்பட்ட பை கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பையை பிரித்து பார்த்ததில், அதில், தங்கக் கட்டிகள், செயின்கள், உருக்கி எடுக்கப்பட்ட தங்க கம்பிகள் என 17 புள்ளி 7 கிலோ தங்கம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவற்றின் சர்வதேச மதிப்பு 10 புள்ளி 5 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்