சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு அதிரடிப்படை வீரர் சிலையை நிறுவி கிராம மக்கள் வழிபட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ்தார் மாவட்டம், பனியாகாவூன் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரவன் காஸ்யப், சிறப்பு அதிரடி படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில், ஷ்ரவன் காஸ்யப் மரணமடைந்தார். நக்சலைட்டுகளுடன் தீரத்துடன் போராடி அவர், வீரமரணமடைந்தது, சொந்த ஊரான பனியாகாவூன் கிராமத்தை எட்டியது. இதனையடுத்து, சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள், ஷ்ரவன் காஸ்யப்பின் வீரத்தையும், உயிர்த் தியாகத்தையும் நினைவு கூர்வதற்காக, கிராமத்தின் மையத்தில் அவருக்கு சிலையை நிறுவி, அதனை வழிபட்டு வருகின்றனர். கடந்த 9-ம் தேதி ஷ்ரவன் காஸ்யப்புக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.