இந்தியாவிலேயே முதன் முறையாக திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன்.. பேச்சுலர்ஸுக்கு குட் நியூஸ் சொன்ன ஹரியானா அரசு
இந்தியாவிலேயே முதல்முறையாக ஹரியானா மாநிலத்தில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
ஒரு சமயம் வாக்கு கேட்க வந்த அரசியல் தலைவர்களிடம் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தால் , நாங்கள் திருமணம் செய்து கொள்ள பெண் ஏற்பாடு செய்வீர்களா? என்று கேட்டவர்கள் தான், இந்த ஹரியானா இளைஞர்கள்.
திருமணம் செய்து கொள்ள பெண் வீட்டாருக்கு இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு காசு கொடுத்த நிகழ்வும் இந்த மாநிலத்தில் அரங்கேறியதுண்டு.
ஆனால் அதுவே காசு கொடுத்து வாங்கப்பட்ட பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதாக... பிரச்சனைக்குள்ளான நிகழ்வும் உண்டு.
இப்படி 90ஸ் கிட்ஸ்களை மிஞ்சும் அளவிற்கு... 40 ஆண்டுகளுக்கும் மேலாக 'திருமண கனவுடன்' பெண் கிடைக்காமல் 'தனியே தன்னந்தனியே' என தவித்து வருபவர்களாக இருக்கிறார்கள், ஹரியானா இளைஞர்கள்.
இதற்கு காரணம் பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிகக் குறைந்த பாலின விகிதம் உள்ள மாநிலமாக ஹரியானா இருப்பது தான்.
இதனால் ஹரியானாவில் திருமண வயதுடைய ஆண்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலங்களில் மணப்பெண் தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி , ஹரியானாவிற்குள் காலடி எடுத்து வைத்த வேற்று மாநில மருமகள்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இங்கு கடந்த 2001 ஆம் ஆண்டு ஆயிரம் ஆண்களுக்கு 756 பெண்கள் இருந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு பாலின விகிதம் 879 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, ஹரியானாவில் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணமாகாத வர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க முடிவு செய்திருக்கிறது, ஹரியானா.
இன்னும் ஒரு மாதத்திற்குள் அமலுக்கு வர உள்ள இந்த ஓய்வூதியத்தை பெற தகுதிகளாக சில விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் 45 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும்... அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஹரியானாவில் உள்ள திருமணமாகாதவர்கள் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் மாதந்தோறும் இரண்டாயிரத்து 750 ரூபாய் ஓய்வூதியமாக பெற இருப்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒரு வீட்டில் தாய் தந்தையர் இருவரில் ஒருவர் உயிரிழந்தாலும் பென்ஷன் வழங்கும் திட்டத்தை ஹரியானா அரசு கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது திருமணமாகாதவர்களுக்கும் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க அம்மாநிலம் அரசு முடிவு செய்திருப்பது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.