கோயிலுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்..போராட்டத்தில் இறங்கிய மக்கள் - சேலத்தில் பரபரப்பு
எடப்பாடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோயிலுக்கு பூட்டு போடப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் கோயிலை திறக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் குறுக்குப்பட்டி கல்மோட்டூரிலுள்ள அய்யனாரப்பன் கோயிலில், கடந்தாண்டு தெவத்திருவிழா நடைபெற்றது. அப்போது கோயில் வரவு செலவு கணக்கு தொடர்பாக தர்மகர்த்தா சண்முகம் தரப்புக்கும், மாரிக்கவுண்டர் தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரிக்கவுண்டர் தரப்பு தெவத்திருவிழா நடத்த முயல, அதனை சண்முகம் தரப்பு தடுத்ததால் இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதன்காரணமாக வருவாய்த்துறையினர் கோயிலுக்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து மாரிக்கவுண்டர் தரப்பினர் இந்து முன்னணியினரோடு சேர்ந்து, கோயிலை திறக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அக்கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.