கீழே பணத்துடன் கிடந்த பர்ஸ்... உரியவரிடம் சேர்க்கும் வரை உண்ணாவிரதம் - சிறுமியின் நெகிழ்ச்சி செயல்
நாகூர் சந்தனக்கூடு திருவிழாவில் கீழே கிடந்த மணி பர்ஸ்சை, உரியவரிடம் ஒப்படைக்கும் வரை சாப்பிட மறுத்த ஐந்தாம் வகுப்பு மாணவியின் நேர்மை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நாகை மாவட்டம் ஆழியூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பஷீர் அகமது. இவர், நாகூர் சந்தனக்கூடு விழாவுக்கு சென்ற போது இவரது மணி பர்ஸ் காணாமல் போனது. இந்நிலையில் அதே சந்தனக்கூடு விழாவுக்கு சென்ற நாகை சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், பரமேஸ்வரி தம்பதியின் மகள் காயத்ரின் கையில் மணி பர்ஸ் கிடைத்துள்ளது. அதில் ஐந்தாயிரம் ரூபாய், ஏடிஎம், பான் கார்டு, வாகன ஓட்டுர் உரிமம் இருந்துள்ளன.
மாணவி உடனடியாக அதனை பெற்றோரிடம் தந்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார். மணி பர்சை உரியவரிடம் ஒப்படைக்கும் வரை சாப்பிட மாட்டேன் என காயத்ரி அடம் பிடித்துள்ளார். பின்னர் பெற்றோர் மணி பர்சில் இருந்த விசிட்டிங் கார்டு நம்பரை தொடர்பு கொண்டு பஷீர் அகமதுவை வரவழைத்து மணி பர்சை வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாணவியின் செயலால் வியந்து போன பஷீர் அகமது மாணவியின் வீட்டிற்கு சென்று சாப்பிடாமல் இருந்த மாணவிக்கு சாப்பாடு ஊட்டி அன்பை பொழிந்தார். ஐந்தாம் வகுப்பு மாணவியின் நேர்மையான செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.