18 வயதுக்குட்பட்ட மொபைல் பயனர்களின்.. இனி பெற்றோர்கள் அனுமதி கட்டாயம் - கடிவாளம் போடும் அரசின் புது சட்டம்

Update: 2023-07-08 07:45 GMT

டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

சமூக ஊடகங்கள், ஆன்லைன் விற்பனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களை பயன்படுத்துபவர்களின் தனிபட்ட விவரங்களை பாதுகாக்க டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் நிறுவனங்கள், அவற்றை சேமிக்கும் முறைகள், பயன்படுத்தும் முறைகள், டேட்டா திருட்டை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், பயனாளிகளின் உரிமைகள் ஆகியவற்றை இந்த மசோதா நிர்ணயம் செய்கிறது.

இதற்கான வரைவு மசோதா, 2022 நவம்பரில் வெளியிடப் பட்டு, அது தொடர்பான கருத்து கேட்புகள் நடத்தப்பட்டது. டெலிகாம் நிறுவனங்களுடன் மத்திய அரசு இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.

இது தொடர்பாக மொத்தம் 21,666 ஆலோசனைகளும், எதிர்வினைகளும் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டேட்டா பாதுகாப்பை உறுதி செய்யாத நிறுவனங்கள் மீது 500 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இதில் வகை செய்யப்பட்டது. தற்போது இது 250 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரிக்க, அவர்களிடம் நிறுவனங்கள் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட பயனர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இணைய தளங்களில் உள்ள தங்களின் தனிப்பட்ட விவரங்களை அழிக்கும் உரிமை பயனர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்திய டேட்டா பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அபராதம் விதிப்பு உள்ளிட்ட அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்