கல்லூரி மாணவன், பள்ளி மாணவி உயிரிழப்பு.. தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததால் அதிர்ச்சி.. தற்கொலையா? விபத்தா? போலீசார் விசாரணை
சூலூர் அருகே, கல்லூரி மாணவனும், பள்ளி மாணவியும் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அன்னமடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.
இவரது மகன் அஜய், தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வரும் நிலையில், நண்பர் ராஜ்குமார் என்பவருடன், ராசிபாளையம் வரை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனிடையே, ராசிபாளையம் அருகே இறங்கிய அஜய், சற்று நேரத்தில் வந்துவிடுவதாக கூறிவிட்டு, ரயில் கேட் நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அஜய் வராததால், சந்தேகம் அடைந்த ராஜ்குமார் சென்று பார்த்தபோது, அஜயும், மற்றொரு பள்ளி மாணவியும், ரயிலில் அடிபட்டு, தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண், ராசிபாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவி என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இது தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.