"முல்லைப்பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை" - மீண்டும் பரபரப்பை கிளப்பும் கேரள அரசு
முல்லைப்பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணையைக் கட்டலாம் என கேரள அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு பாசனநீரை வழங்கும் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக, கேரள மாநிலம் தொடர்ந்து பிரச்னை செய்துவருகிறது.
பெரியாறு அணையால் கேரளத்துக்கு அபாயம் என 1963 முதல் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன். இதனிடையே பருவநிலை மாற்றத்தால் கேரளத்தில் அடிக்கடி வெள்ளமும் பெரும் நிலச்சரிவும் ஏற்பட... பெரியாறு அணை தொடர்பாக அதிகமாக பீதி ஏற்படுத்தப்பட்டது.
அணை வலுவாகவே உள்ளது என்றும், 152 அடிவரை தண்ணீரைத் தேக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி விட்டது. ஆனாலும் கேரள கட்சிகளும் அடுத்தடுத்த அரசாங்கங்களும் புதிய அணையைக் கட்டுவதில் உறுதியாக இருந்தன.
இடுக்கி மாவட்டம், பீர்மேடு வட்டம், குமுளி ஊராட்சியில் 127 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே, 366 மீட்டர் தொலைவில்,
சுமார் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் புதிய அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அறிக்கையை தயாரிக்க, ஐதராபாத்தைச் சேர்ந்த பிரகதி லேப் எனும் நிறுவனத்தை கேரள அரசு ஒப்படைத்தது. அந்த அமைப்பு தனது முதல்கட்ட வரைவு அறிக்கையை கேரள பாசனத் துறையிடம் வழங்கியுள்ளது.
அதில், உத்தேச புதிய அணையால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை ஆய்வுசெய்த கேரள அரசின் வனத்துறை, பாசனத் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு, புதிய அணைக்கான கட்டுமானத்தைத் தொடங்கலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.
1979 முதலே புதிய அணையைக் கட்ட கேரள அரசு முயன்று வருகிறது. 2011ஆம் ஆண்டில் சாத்தியக்கூறு அறிக்கையை யும் தயாரித்தது. புது அணையைக் கட்ட தமிழக அரசின் ஒப்புதல் வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டபோதும், கேரள அரசு புதிய அணைக் கட்டுமானத்தில் முழுமூச்சாக இருந்துவருகிறது.