அதிதீவிர புயலான 'பிபர்ஜாய்' குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே கரையை கடக்க துவங்கியுள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த அதி தீவிர 'பிபர்ஜாய்' புயல், கட்ஜ் மாவட்டத்தில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் கரையை கடக்க துவங்கியுள்ள 'பிபர்ஜாய்', நள்ளிரவு முழுமையாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதோடு, கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. துவாரகா, மார்பி, ஜூனாகத், ஜாம்நகர், மாண்ட்வி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 397 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், முகாம்கள், மீட்புப் படைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.