நேர்மைக்கு கிடைத்த பரிசு உயிரா?.. VAO தலையை ரெண்டாக வெட்டிய கொடூரம் - பார்க்க முடியாமல் கதறிய மகன்
தூத்துக்குடியில், அரசு அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து கிராம நிர்வாக அலுவலரை அரிவாளால் சரமாரியாக தாக்கிக் கொன்ற பரபரப்பு சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவர், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். லூர்து பிரான்சிஸ் வழக்கம்போல அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் இருவர், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைக் கண்டு, அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஏஓ லூர்து பிரான்சிஸ், அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.