விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய இளைஞர் திடீரென மயங்கி உயிரிழப்பு - 4 போலீசார் பணியிட மாற்றம்
சென்னை துரைப்பாக்கத்தில், செல்போன் திருட்டு சம்பவத்தில், விசாரிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் உட்பட 4 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், செல்போன் திருட்டு வழக்கில், துரைப்பாக்கம் போலீசாரிடம் சிக்கி உள்ளார். செல்போனை ஒப்படைத்த நிலையில், தினேஷ்குமாரை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், வீட்டில் திடீரென மயங்கிய தினேஷ், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலைசெல்வி,ராஜாமணி, தலைமை காவலர் சந்திரசேகரன், காவலர் பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, உயிரிழந்த தினேஷ் குமாரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.