கழுத்தில் தாலியோடு காதலனை நம்பி...சென்னை வரை வந்த இன்ஸ்டா காதலி - மெதுவாக சுயரூபத்தை காட்டிய காதலன்
லிவ் இன் உறவில் இருந்த காதலியை கழட்டி விட்ட இளைஞரை விசாரணைக்கு அழைத்த போலீசார், அவரை காதலியுடனே திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இதனால், கொதித்து போன இளைஞரின் பெற்றோர்... இது காவல் நிலையம் அல்ல அர்ச்சகர் நிலையம் என கூறி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சக்திநகர் புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் விக்னேஷ். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரின் மகனான விக்னேஷூக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் தீபிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது...
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் லிவ் இன் உறவில் ஒரே வீட்டில் வசிக்கும் அளவிற்கு நெருங்கி பழகி வந்துள்ளனர்...
இந்நிலையில், பெற்றோரின் நெருக்கடியாலோ... அல்லது
தீபிகாவுடனான வாழ்க்கை சலித்து போனதாலோ என்னவோ திடீரென தீபிகாவுடன் பழகுவதை நிறுத்திய விக்னேஷ், அவரை லிவ் இன் உறவில் இருந்து கழட்டி விட்டிருக்கிறார்....
இதனால், அதிர்ச்சியடைந்த தீபிகா ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், அங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் தமிழரசி இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்...
அப்போது இருவரையும் எச்சரித்த தமிழரசி, இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது... இதையடுத்து இருவரும் சென்னை, தரமணியில் வீடு எடுத்து தனியே வசித்து வந்த நிலையில், மறுபடியும் தீபிகாவுடன் தகராறு செய்ய ஆரம்பித்திருக்கிறார் விக்னேஷ்.. தனக்கு போலீசார் செய்து வைத்த திருமணம் செல்லாது எனக்கூறி ஒரு கட்டத்தில் அவரை அடித்து சித்ரவதை செய்து பிரிந்து சென்றிருக்கிறார்....
இதனால், விக்னேஷை தேடி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தீபிகா, விக்னேஷின் பெற்றோர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
"திடீரென, திருமணம் செய்ய மறுத்து விக்னேஷ் பிரிந்து சென்றார்"
"நான் விக்னேஷ் மீது போலீசில் புகாரளித்தேன்"
" புகாரின் பேரில் தங்களுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்தனர்"
"இந்த திருமணம் செல்லாது என தன்னை அடித்து சித்ரவதை செய்தார்"
இதற்கிடையே, தனது மகனுக்கு ஆத்தூர் காவல்நிலைய காவலர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்ததாகவும், அதற்கு முக்கிய காரணமான காவல் ஆய்வாளர் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விக்னேஷின் குடும்பத்தார் பதாகை ஏந்தி காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்...
தொடர்ந்து, இது காவல்நிலையம் அல்ல அர்ச்சகர் நிலையம் எனக்கூறி முழக்கமிட்ட விக்னேஷின் தந்தை, இந்த காவல்நிலையம் வரும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என கூறி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.....
இதனிடையே, சம்மந்தப்பட்ட பெண் தீபிகா அடியாட்களுடன் வீட்டினுள் புகுந்து, தங்களையும், தனது மகளையும் தாக்கியதாகவும், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி விக்னேஷ் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்..
இந்த விவகாரம் போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது உரிய விசாரணைக்கு பின்னரே தெரியவரும்..