"இந்தியா - நேபாளம் இடையிலான உறவு ஹிட்- பிரதமர் மோடி புகழாரம்

Update: 2023-06-01 10:33 GMT

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா, 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் பிரசண்டாவும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். 7 முக்கிய துறைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தொடர்ந்து இந்தியாவிலுள்ள பத்னாபாவில் இருந்து நேபாளத்தில் உள்ள கஸ்மன் யார்டு பகுதி வரை இந்திய ரயில்வேயின் சரக்கு ரயிலை இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான உறவு ஹிட் என்பதை அறிவிப்பதில் அளப்பரிய மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த உறவை வருங்காலத்தில் சூப்பர் ஹிட் ஆகும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான மத, கலாச்சார உறவுகள் பழமையானது மட்டுமன்றி வலிமையானது என தெரிவித்த பிரதமர் மோடி, அதை வலுப்படுத்தும் வகையில், ராமாயணா சர்கியூட் வழித்தட பணிகளை விரைவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சணல் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை இந்தியா நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரசண்டா, நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமான வழி தடங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், போக்ராவில் இருந்து இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்