"மதுவை போதை பொருள் என நிரூபித்தால்... ரூ.1 லட்சம் பரிசு..!" - வைரலாகும் அதிரடி அறிவிப்பு
டாஸ்மாக் மதுவை போதை பொருள் என நிரூபித்து அரசு கெஜட்டில் வெளியிட வைப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆகஸ்ட் 11 - ஆம் தேதி, போதை ஒழிப்பு நாளாக அறிவித்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி, அன்று டாஸ்மாக் கடைகள் திறந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் சரக்குகள் போதை பட்டியலில் இல்லை என்பதை உணர்ந்து டாஸ்மாக் மது பிரியர்கள் மகிழ்ச்சியடைந்ததாக கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறைக்க சொல்வது நியாயமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபிரியர்கள் "தைபொங்கல்"இலக்கை அரசுக்கு எப்படி நிறைவேற்றி தர முடியும் என மது குடிப்போர் நல சங்கம் தெரிவித்துள்ளது. அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது, போதை பொருள் என நிரூபித்து அரசு கெஜட்டில் வெளியிட வைப்போருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அச்சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.