"15 நிமிடத்தில் ATM-ல் திருடுவது எப்படி ?" கோச்சிங் கிளாஸ் சென்ற இளைஞர்கள் - தியரியில் பாஸ்.. பிராக்டிக்கலில் பெயில்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஏடிஎம்மில் திருடுவது எப்படி என கோச்சிங் க்ளாஸில் பயிற்சி பெற்று, சுமார் 39 லட்ச ரூபாய் பணத்தை இளைஞர்கள் திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் 39 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில், லக்னோ - சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து கும்பலை மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 9 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் நீரஜ் என்பவர் கும்பலின் முக்கிய குற்றவாளி என்பது தெரியவர, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பீகாரை சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர், நாடு முழுவதும் வேலை இல்லாத இளைஞர்களை திரட்டி, 15 நிமிடங்களில் ஏடிஎம்மில் திருடுவது எப்படி? என கோச்சிங் க்ளாஸ் நடத்தியது தெரியவந்துள்ளது. 30 நாட்கள் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, அவர்களை ஏடிஎம்மில் திருட அனுப்பியதும் தெரியவர, கும்பலை பீகார் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.