"உதயநிதி பற்றி நான் எப்படி தவறாக பேசுவேன்?" - அமைச்சர் பிடிஆர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஆடியோ ஜோடிக்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோக்கு வீடியோ வாயிலாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஒபாமா, டிரம்ப் பேசுவது போன்ற காட்சிகளை இணைத்து, உண்மை போல் தோற்றமளிக்கும் இந்த வீடியோக்களை கணினியில் உருவாக்க முடியும் என்றால்.. ஆடியோவை என்னவெல்லாம் செய்யலாம் என கேள்வியை எழுப்பியுள்ளார். திராவிட மாடல் செயல் வேகத்தை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள், சிறப்பான பணிகளை சீர்குலைக்க நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திகாக பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர் என சாடியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியவர்களின் தானும் ஒருவன் எனக் கூறியிருக்கும் பழனிவேல் தியாகராஜன், ஆற்றல் மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன் என கேள்வியை எழுப்பியிருக்கிறார். அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டி, ஆலோசகர், உறுதுணையாக இருப்பவர் சபரீசன் எனக் கூறியிருக்கும் தியாகராஜன், உதயநிதி, சபரீசனிடம் இருந்து தன்னை பிரித்து அரசியல் எண்ண்ங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் முயற்சி வெற்றிப்பெறாது என தெரிவித்துள்ளார்.