'இந்தியா' என்ற பெயர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டது என்றும் பாரதம் என்ற பெயர் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து உள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
அகில பாரத வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்திய அரசியலமைப்பு நாள் விழா சென்னையில் எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அனிதா சுமந்த், மூத்த வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி., இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்படுள்ளது என்றார். பாரதம் என்பது 2500 ஆண்டுகளுக்கு முன் உள்ளதாகவும், ஆதி சங்கரர் நாடு முழுவதும் பல ஆசிரமங்களை, உருவாக்கினார் எனவும் தெரிவித்தார். பாரதம் என்பது ஆன்மீகம், கலாசாரம் நிறைந்த பூமி என்றும், இந்த நாடு சனாதன தர்மம் உடையது என்றும் கூறினார். நம் அரசியலமைப்பு மதச்சார்பின்மை என்று சொல்லுவதாகவும், அதனை அப்படியே எடுத்து கொள்ள கூடாது என தெரிவித்தார். நாம் சொல்லும் மதச்சார்பின்மை எல்லா மதங்களுக்கும், சார்பற்றது இல்லை சமயம் சார்பற்றது என்றே பொருள் என கூறினார்.