"ஹெலிகாப்டரில் அழைத்து செல்கிறோம்" பக்தர்களை குறிவைக்கும் கும்பல் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களான பத்ரிநாத், கேத்தார்நாத், கங்கோத்ரி, வைஷ்ணவ தேவி கோவில் போன்ற இடங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கட்டணமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இணையதளம் மூலமாக பலரும் முன்பதிவு செய்து இந்த சேவையை பெற்று வருகின்றனர். இதனிடையே, இதனைப் பயன்படுத்தி கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதற்காக இணையத்தில் முன்பதிவு செய்ய தேடும்போது, முதலில் மோசடி கும்பலின் இணையதள பக்கம் வருவதுபோன்று தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அறியாதவர்கள்,
அந்த பக்கத்தில் நுழைந்து கிளிக் செய்தவுடன், கேட்கும் விவரங்களை கொடுத்து, பணத்தை இழப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே தெரிந்த ட்ராவல் ஏஜென்ட் மற்றும் நம்பகத் தன்மையான இணையதளங்கள் மூலமாகவே, இதனை மேற்கொள்ள வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.