அரபிக் கடலில் உருவான முதல் புயல்..ஒரு மாநிலத்தையே காலி செய்ய கூடிய சக்திவாய்ந்த புயல்
இந்த ஆண்டு அரபிக் கடலில் உருவான முதல் புயல் தான் 'பிபர்ஜாய்'. புயல் காரணமாக தென்மேற்கு மாநிலங்களுக்கு பல்வேறு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம். அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்து வருகிறது. தற்போது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் பிபர்ஜாய் புயல், தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புயல் மும்பைக்கு 600 கிலோ மீட்டர் மேற்கிலும், பாகிஸ்தானின் கராச்சிக்கு தெற்கே 830 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் , வரும்15ஆம் தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளில் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தெந்த மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தற்போது பார்க்கலாம். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆலப்புழா இடுக்கி எர்ணாகுளம் திருச்சூர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் ஜூன் 14 - 15ஆம் தேதிகளில் தெற்கு மற்றும் மேற்கு ராஜஸ்தானில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு கடல் அலைகள் சற்று கொந்தளிப்புடன் காணப்படுகின்றன கர்நாடகா கடற்கரை பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.சனிக்கிழமை முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கொட்டி தீர்த்து வரும் கனமழைக்கு 30க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 145 பேர் காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.